நரஸிம்ஹ அவதாரத்தை தரிசிக்க விரும்பிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகள் தவம் செய்ய, ஒரு கடிகை (ஒரு நாழிகை) நேரத்தில் பகவான் காட்சி தந்தமையால் இந்த ஸ்தலம் 'திருக்கடிகை' என்ற பெயர் பெற்றது. நரஸிம்ஹர் யோக நிலையில் அமர்ந்த ஸ்தலமாதலால் சோழசிம்மபுரம் என்ற பெயர் பெற்று நாளடைவில் மருவி 'சோளிங்கர்' என்று தற்போது அழைக்கப்படுகிறது. இங்கு மலை அடிவாரக் கோயில், பெரிய மலைக் கோயில் மற்றும் சிறிய மலைக் கோயில் என்று மூன்று கோயில்கள் உள்ளன.
அடிவாரக் கோயிலில் மூலவர் இல்லை. இங்கு உத்ஸவர் பக்தவத்ஸலப் பெருமாள் ஸேவை சாதிக்கிறார். அருகில் ஆதிகேசவப் பெருமாள் சன்னதி உள்ளது.
மூலவர் யோக நரஸிம்ஹர், அக்காரக்கனி என்னும் திருநாமங்களுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு அம்ருதவல்லி என்பது திருநாமம். சிறிய திருவடியாம் அனுமனுக்கு பகவான் பிரத்யக்ஷம். மலை மேல் சுமார் 750 அடி உயரத்தில் உள்ள சன்னதி. 1300 படிகள் உள்ளன.
சிறிய மலை மீது யோக ஆஞ்சனேயர், கையில் சங்கு சக்கரங்கள் தாங்கி எதிர் மலையில் உள்ள யோக நரஸிம்ஹ மூர்த்தியை சேவித்தவாறு ஸேவை சாதிக்கின்றார். ஆஞ்சனேயர் கையில் சங்கு சக்கரத்துடன் உள்ள காட்சி வேறெங்கும் கிடையாது. இந்த மலை 350 அடி உயரம் கொண்டது. 406 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
தொட்டாச்சாரியார் என்ற ஆச்சாரியாருக்கு காஞ்சி வரதராஜர் தனது கருட ஸேவைக் காட்சியை இங்கு காட்டியருளியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இந்த ஸ்தலத்தில் பேய், பிசாசு உள்ளிட்ட அனேக வியாதிகள் தீர இங்குள்ள தக்கான் குளத்தில் நீராடி, மலை மீது உள்ள யோக நரஸிம்ஹரை வலம் வந்து தங்கள் நோய் தீர பிரார்த்திக்கின்றனர்.
ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள், எறும்பியப்பா ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 4 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
|